மாணவர் கொத்தணி; 100 இற்கும் மேற்பட்டோருக்கு தொற்று! ஆரம்பப் பிரிவினரே பாதிப்பு.
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் அதிகமான ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள 55 இற்கும் அதிகமான பாடசாலைகளிலுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தொற்று நோய்ப் பிரிவின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் கல்வி பயின்ற வகுப்புக்களைச் சேர்ந்த 250 இற்கும் அதிகமான மாணவர்கள் தற்சமயம் அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இருபதுக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை அன்டிஜன் பரிசோதனை முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் நாளாந்தம் கணிசமான அளவு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் சுகாதாரப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.
அநுராபுரம் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 2 ஆயிரத்துக்கும் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ரத்நாயக்க தெரிவித்தாா்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவர்களில் அதிகளவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களே உள்ளடங்குகின்றனா். ஒக்டோபா் மாதத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 800 பேருக்கு கொரேனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்து 650 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் 500 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அர்களில் 250 முதல் 300 வரையானவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதுவரையில் 28 ஆயிரத்து 500 க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடயாளம் காணப்பட்டுள்ளதுடன் 341 கொரோனா மரணங்களும் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன” – என்றார்.