‘பட்ஜட்’ மீதான விவாதத்தின்போது நிதி அமைச்சர் இருக்க வேண்டும்! சபையில் எதிரணி கோரிக்கை.
பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும் என்று அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தின்போது எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி. ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
விவாதத்தில் உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறுகையில்,
“கேள்விகளைக் கேட்க சபையில் நிதி அமைச்சர் இல்லை. யாரிடம் நாங்கள் கேட்பது என்ற பிரச்சினை காணப்படுகின்றது. பிரதி அமைச்சராவாது இருக்கின்றாரா?” என்றார்.
இதன்போது எழுந்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,
“நிதி அமைச்சருக்குப் பதிலாக இவர்களிடம் சந்தேகங்கள் இருப்பின் அதனைத் தெளிவுப்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம். இவர்கள் பக்கத்தில் நான்கு பேரே ஆசனங்களில் இருக்கின்றனர். இப்படி இருந்துகொண்டு நிதி அமைச்சரவைத் தேடுகின்றனர்” – என்றார்.
இவ்வேளையில் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறுகையில், “எங்களுக்கு உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்கக் கூடிய ஒருவரே இருக்க வேண்டும். பதிலளிக்க முடியாது நிதி அமைச்சர் ஒளிந்துகொண்டுள்ளார். எனக்குப் பதிலளிக்கக் கூடியவரிடமே நான் கேள்வி கேட்பேன்” – என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எழுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி. கூறுகையில்,
“வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது நிதி அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக சபையில் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்கள் வந்திருந்தனர். அதன்படி இனிமேல் அவரை இங்கே இருக்குமாறு அழைப்போம்” – என்றார்.