பலத்த மழையைப் பொருட்படுத்தாது சபரிமலையில் பக்தர்கள் வழிபாடு
பலத்த மழை, கரோனா சூழலையும் தாண்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர். இத்துடன் வருடம்தோறும் இரண்டு மாத காலம் நடைபெறும் சபரிமலை மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது.
மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோயில் கருவறையில் உள்ள பாரம்பரியமான விளக்கை செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்றி வைத்தார். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக ஐயப்பன் சந்நிதானத்தில் மலையாள மாதமான விருச்சிகம் (கார்த்திகை மாதம்) முதல் தேதி பக்தர்கள் கடல் போலக் குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவிலான பக்தர்களே சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். பலத்த மழை பெய்து வருவதால் அடுத்த மூன்று நான்கு நாள்களுக்கு பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பம்பை நதியில் நீர்மட்டம் அபாய அளவில் பாய்வதால் நதியில் புனித நீராடலுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தை தந்திரி கண்டரரு மோகனரரு முன்னிலையில், ஓய்வு பெற உள்ள மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் போற்றி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இந்த யாத்திரை காலத்தில் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் 30,000 பக்தர்களை மட்டும் அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி யாத்திரை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
41 நாள்கள் நடைபெறவுள்ள மண்டல பூஜைக் காலம் டிசம்பர் 26-ஆம் தேதி நிறைவடையும். அதன் பிறகு யாத்திரையின் இரண்டாம் கட்டமான மகரவிளக்கு பூஜைக் காலத்தையொட்டி கோயில் டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-இல் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததும் ஜனவரி 20-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.