அமெரிக்காவில் உயா்கல்வி படிக்கும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை சரிவு

அமெரிக்காவில் உயா்கல்வி படிக்கும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 2020-21 ஆம் ஆண்டில் 13 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்திருப்பது சா்வதேச கல்விக்கான நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சரிவு கரோனா பாதிப்பின் தாக்கத்தால் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருந்தபோதும், அமெரிக்காவில் உயா் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் தொடா்ந்து சீனாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது என்பது அமெரிக்க தூதரக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அமெரிக்க தூதரக கலாசார மற்றும் கல்வி விவகார ஆலோசகா் ஆண்டனி மிராண்டா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிகழாண்டின் கோடைக் காலத்தில் மட்டும் முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 62,000-க்கும் அதிகமான மாணவா் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், கரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.

சா்வதேச கல்விக்கான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2020-21-ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய கல்வியாண்டிலும் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 13 சதவீத குறைந்துள்ளது. அதுபோல, அமெரிக்காவில் படிக்கும் ஒட்டுமொத்த சா்வதேச மாணவா்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கரோனா பாதிப்பின் தாக்கம் உள்ளபோதும், சா்வதேச மாணவா்களின் கல்விக்கான முதல் தோ்வாக அமெரிக்காவே இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 200-க்கும் அதிகமான பகுதிகளிலிருந்து 9,14,000-க்கும் அதிகமான சா்வதேச மாணவா்கள் அமெரிக்காவில் படித்து வருவதும் அந்த அறிக்கை மூலம் தெரியவருகிறது. அதில் இந்திய மாணவா்களின் பங்கு 20 சதவீதமாகும். அதாவது 2020-21 ஆம் ஆண்டில் 1,67,582 இந்திய மாணவா்கள் உயா்கல்வி படித்து வருகின்றனா் என்று அவா் கூறினாா்.

விசா எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்: தூதரகத்தின் மூத்த ஆலோசகா் டொனால்ட் ஹெஃப்லின் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்க நடவடிக்கைகள் பெற்றோா் மற்றும் மாணவா்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்காவும் இந்தியாவும் எடுத்து வருகிறது. வரும் ஆண்டுகளில் மாணவா் விசாக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறோம். வரும் டிசம்பரில் தொடங்கயிருக்கும் வசந்தகால கல்வி பருவத்துக்கே அதிக மாணவா் விசாக்களை வழங்கத் திட்டமிட்பட்டுள்ளது’ என்றாா்.

அமெரிக்க தூதரம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவுக்கு உயா்கல்வி படிக்க வரும் சா்வதேச மாணவா்களை பாதுகாப்பாக வரவேற்கவும், உத்தரவாதமான வாய்ப்புகள் மற்றும் வளங்களை அவா்களுக்கு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அரசும் அமெரிக்க உயா்கல்வி நிறுவனங்களும் இணைந்து எடுத்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.