நாட்டிலுள்ள பாடசாலைகளில் தொழில் வாண்மை கல்வித்திட்டம் அறிமுகம்.
பாடசாலை கல்வித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணக்கருவின் கீழ், பாடசாலைகளில் தொழில் வாண்மைக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாடசாலை மட்டத்தில் தொழில் வாண்மை ஆசிரியர்களை உருவாக்கும் வகையிலான புதிய திட்டத்தில் செயலமர்வுகளை நடத்தும் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுமே இயங்க முடியாத அவலத்துக்குள் தள்ளப்பட்டிருந்தன.
கொவிட் – 19 தொற்றுப் பரவல் ஒருபுறம் சவாலாகக் காணப்பட்டது. மறுபுறம், அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளப் போராட்டம். இதனால், பாடசாலைகள் இயங்க முடியாத நிலைமை உருவானது.
இந்த நிலைமையில், நாட்டின் கல்வித்துறை பாரிய சவாலை எதிர்கொண்டது. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து காணப்படும் நிலையில், இதற்கமைய ஆரம்ப நடவடிக்கையாக, ( SBATD ) “பாடசாலை மட்ட தொழில் வாண்மை ஆசிரியர் அபிவிருத்தித் திட்டத்தை” முதன்மைப் படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக, மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள கல்லொழுவை அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஆசிரியர்களை உள்வாங்கிய செயலமர்வொன்று, அண்மையில் ( 13.11.2021) அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
“வெற்றிகரமாக செயற்திட்ட முன்மொழிவு” எனும் தலைப்பில், தேசிய கல்வி நிறுவகத்தின் வளவாளர் எம்.ஜே.எம். ஸனீர், இச்செயலமர்வை நடத்தினார்.
அல் – அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் வழிகாட்டலில், முழு நாள் செயலமர்வாக நடைபெற்ற இந்நிகழ்வின் இறுதியில், இதில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
காத்திரமானதொரு செயலமர்வாக இது அமையப்பெற்றதாக, வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் இதன்போது தெரிவித்தார். எதிர்காலத்திலும் இதுபோன்ற செயலமர்வுகளை, தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.