பிரதான நகரங்களுக்கு கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பு திட்டம்.
சில பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட கழிவு நீர் முகாமைத்துவ அமைப்புகள் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ
சில பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட கழிவு நீர் முகாமைத்துவ அமைப்புகள் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் நிர்மாணிக்கப்படும் என மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கண்டி நகர்ப்புற ‘கழிவு நீர் முகாமைத்துவத் திட்டத்தை’ அலரிமாளிகையில் இருந்து இணையவழி ஊடாக ஆரம்பித்துவைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்கும் போதே கௌரவ பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘சுகாதாரம் தொடர்பான தேசிய திட்டமொன்றை’ உருவாக்க முடிந்திருப்பது மிகப்பெரிய சாதனை என கௌரவ பிரதமர் கூறினார்.
நிலத்தடி நீரைப் பாதுகாத்து நீர் வளப் பகுதிகளைப் பாதுகாத்து, நீரின் தரத்தை பராமரிப்பதற்கு 2030 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும் ‘சுகாதாரம் தொடர்பான தேசிய திட்டம்’ நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கண்டி கன்னொறுவ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் கண்டி நகர கழிவு முகாமைத்துவ திட்டத்தின் வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் கண்டி மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.’
கண்டி மேயர் கேசர சேனாநாயக்க மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் திலின எஸ். திரு.விஜேதுங்க, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கண்டி நகர்ப்புற கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் குறித்த ஆவணப்படமும் திறப்பு விழாவுடன் இணைந்து ஒளிபரப்பப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை,
தெற்காசிய பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் சுகாதார வசதிகள் மற்றும் பயன்பாட்டில் நாங்கள் இன்னும் முன்னணியில் இருக்கிறோம். எவ்வாறாயினும், எமது சொந்த செயற்பாடுகளினால் எமது நாட்டில் உள்ள பல நீர் ஆதாரங்கள் தற்போது மாசடைந்து வருகின்றன.
அதனால்தான் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ‘சுகாதாரம் தொடர்பான தேசிய திட்டத்தை’ உருவாக்கியது. அதன்படி, எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ‘கழிவுநீர் முகாமைத்துவ அமைப்புகளை’ உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட கழிவு நீர் முகாமைத்துவ பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றன. வீடுகள், வணிகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நிர்வகிப்பது எளிதல்ல.
கண்டி உலக பாரம்பரிய நகரமாகும். முழு பௌத்த உலகின் மணிமகுடமான புனித தலதா மாளிகை கண்டியில் உள்ளது.
எனினும் கண்டியில் சில காலமாக சுற்றாடல் மாசு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.
மகாவலி கங்கையிலும் முறையற்ற விதத்தில் கழிவுநீர் சேர்க்கப்படுவதை நாம் அறிவோம். அதுமட்டுமின்றி பல இடங்கள் கழிவுநீர் பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமையை உணர்ந்து, ‘கழிவுநீர் முகாமைத்துவம்’ திட்டம் வரலாற்று சிறப்புமிக்க கண்டி வாவியின் பாதுகாப்பு மற்றும் கண்டியை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறைக்கு பெரிதும் உதவும்.
மக்களின் சுகாதாரத்தை முதன்மைப்படுத்தும் இத்தகைய தேசியத் திட்டம் செயல்படுத்தப்படுவதை எதிர்கால முதலீடாக பார்க்கிறோம். இந்த வேலைத்திட்டம் 2030 வரை செயற்படுத்தப்படும் என எமது அமைச்சர் வாசுதேவ அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.
கண்டி நகர்ப்புற கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்திற்கான ஆரம்ப நிதியை ஜய்கா நிறுவனம் வழங்கியுள்ளது. அவர்களுக்கும் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் நாம் நன்றி கூற வேண்டும்.
தற்போது கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, மொரட்டுவை போன்ற மாநகர சபை பிரதேசங்களிலும் ஜா-எல, ஏகல, குருநாகல் போன்ற நகரங்களிலும் மாத்திரமே கழிவு நீர் முகாமைத்துவ அமைப்புகள் உள்ளன. நாட்டின் சில பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த கழிவுநீர் மகாமைத்துவ அமைப்புகளை எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.