தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல் கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில், பலத்த மழை கொட்டியது. நேற்று இரவு சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்தவாரம் பெய்த மழையினால் தேங்கிய தண்ணீர் மெல்ல மெல்ல வடிந்து வரும் நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் சாலைகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.

திருப்பூரில் நேற்று மாலை முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாக, தொடர்ந்து பெய்த மழை காரணமாக, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மங்கலம் சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை தொடங்கி 3 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. ஏரிச்சாலை, மூஞ்சிக்க‌ல், செண்ப‌க‌னூர் பகுதிகளில் இரவு வரை, சாரல் மழை பெய்தது. கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில், பூல‌த்தூர் பிரிவு அருகே ம‌ர‌ம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.