அதிகாலை கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே முழுமையாக கரையை கடந்ததாக தென்மண்டல வானிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாலச்சந்திரன் கூறுகையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை 1.30 மணி அளவில் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கி 3 மணியிலிருந்து 4 மணி நிலவரப்படி முழுமையாக கரையை கடந்ததாக தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தின் மேல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நேற்றிலிருந்து கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பாலாற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரையில் இருக்கக்கூடிய பொது மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கின்றன.
மேலும் இந்த மழையின் காரணமாக அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது இதனால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்த மழை அளவு விவரம் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 11.9 (சுமார் 12 சென்டிமீட்டர்) சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதற்கடுத்தபடியாக சோழவரத்தில் 10.4 சென்டி மீட்டர் மழையும் திருத்தணியில் 9.8 சென்டி மீட்டர் மழையும் ஆவடியில் 9.4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
பூண்டியில் 7.8 சென்டி மீட்டர் மழையும் தாமரை பக்கத்தில் 6.8 சென்டி மீட்டர் மழையும் திருவள்ளூரில் 7.5 சென்டி மீட்டர் மழையும் ஊத்துக்கோட்டையில் 7.3 சென்டிமீட்டர் மழையும் ஆர்.கே. பேட்டையில் 7 1 சென்டி மீட்டர் மழையும் சோழவரத்தில் 10.4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.
மொத்தம் ஒன்பது இடங்களில் கனமழை பதிவாகியிருந்தது. அதற்கு அடுத்தபடியாக செங்குன்றத்தில் 5.2 சென்டி மீட்டர் மழையும் கும்மிடிப்பூண்டியில் 4.5 சென்டி மீட்டர் மழையும் பொன்னேரியில் 4.2 சென்டி மீட்டர் மழையும் பூவிருந்தவல்லியில் 3.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1051 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இது சராசரி மழை 7.1 சென்டிமீட்டர் மழை ஆகும்.