உலக பெண்கள் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’
டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிஆட்டத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுயான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார்.
1 மணி 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் கோன்டாவெய்ட்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
வெற்றிக்கு பிறகு 28 வயதான முகுருஜா கூறுகையில் ‘என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்’ என்றார்.