கொரோனா வைரஸ் பரவலைத் தீவிரப்படுத்த எதிரணி முயற்சி!
“ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள், பாடசாலைகளை மூடியதால் பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தாக்கம் தொடர்பில் அரசு, சுகாதாரத் தரப்பினர், நாட்டு மக்கள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடும் ஆலோசனைகளைக் கருத்தில்கொள்ளாமல் எதிர்த்தரப்பினர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகிறார்கள்.
கொரோனாவைக் கருத்தில்கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக உலகில் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு பாடசாலைகளும் மூடப்பட்டன.
இந்தநிலையில், நாட்டையும் பாடசாலைகளையும் மூடவேண்டாம் என உலக உளவியல் நிபுணர்கள் உலக அரச தலைவர்களிடமும் அரசுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கொரோனாத் தாக்கத்தின் காரணமாக சுமார் இரு வருட காலமாக எமது நாட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன.
புதுவருட கொரோனாக் கொத்தணி பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகள் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுப்படுகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
தேசிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மிகவும் புத்திசாலித்தனமான முறையில், நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
அரச செலவு முகாமைத்துவம், அரச செயற்றிட்ட வினைத்திறன், நிர்மாணிப்புக்களுக்காக மக்களை ஊக்கப்படுத்தல், சமுர்த்தி செயற்றிட்டத்தை அபிவிருத்தி செயற்றிட்டமாக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் 2022ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. உற்பத்தி பொருளாதாரத்துக்காகப் பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தாக்கத்தால் இறக்குமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருள் உற்பத்திகளுக்கும் பெருமளவில் கேள்வி நிலவுகின்றது.
உலக சந்தையில் எரிபொருள், சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இந்தப் பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்ததல்ல.
எமது நாட்டில் நீர், எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவை நிவாரண அடிப்படையில் வழங்கப்படுகின்றமை தவறானதாகும்.
பெற்றோலியம், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் துறை ஆகிய பிரதான துறைகளில் காணப்படும் நட்டம் நாட்டின் அபிவிருத்திக்குப் பிரதான தடையாகக் காணப்படுகின்றது” – என்றார்.