மது குடிப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் – அரசு அதிகாரியின் பகீர் லாஜிக்
மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் என அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு அலைகளாக பரவி, கடந்த இரண்டு ஆண்டுகளை முடக்கி போட்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டு வந்திருப்பது, கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கான கேடயமாக அமைந்திருக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, கொரோனா பாதித்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்பதே தற்போதைய நிலையில் உயிர் காக்கும் கவசமாக நமக்கு கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. மேலும் தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கி மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பயணங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்வோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை காட்டுவது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதேபோல அலுவலகங்களுக்கு வருவோரும் தடுப்பூசி போட்டியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்,
அரசுத்துறையினரும் பல்வேறு வகைகளில் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியை தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளில் மதுவாங்க வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படாது எனவும் காந்த்வா மாவட்ட கலால்துறை அதிகாரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அனைத்து கடைகள் முன்பும் விளம்பரம் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது, தடுப்பூசி செலுத்தியிருப்பதற்கான சான்றிதழ்களை மதுபானம் வாங்க வருபவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மிக வினோதமான பதில் ஒன்றை அந்த அரசு அதிகாரி அளித்துள்ளார்.
மதுபானம் குடிப்போர் பொய் பேச மாட்டார்கள் எனவே சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமல்ல. எங்கள் அனுபவத்தில் மது குடிப்பவர்கள் நேர்மையானவர்கள். எனவே மது வாங்க வருகை தருவோர், உண்மையாக தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா இல்லையா என்பதை கூற வேண்டும் என அந்த அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் அரசு உயர் அதிகாரியின் இந்த பேச்சை சமூக வலைத்தளத்தில் ஒரு சாரார் கிண்டலடித்தும் வருகின்றனர். இனி லை டிரெக்டர் தேவையில்லை, மது பாட்டில் கொடுத்தால் போதும், குடிப்பவர் பொய் பேச மாட்டார் என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.