நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதியை தாக்கிய காவலர்கள்!

பீகார் மாநிலத்தில் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதி மீது காவலர் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுக்க வந்த வழக்கறிஞர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (Additional District and Sessions Court Judge) அவினாஷ்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டு இருந்தார். அப்போது நீதிமன்றத்தின் விசாரணை அறைக்குள் நுழைந்த கோகர்திஹா காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்று உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி அவினாஷ்குமாரை தாக்கி உள்ளனர். அவரை நோக்கி துப்பாக்கியை காட்டியும் மிரட்டி உள்ளனர்.

அங்கு இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீது காவலர்கள் இருவரும் தாக்குதல் நடத்தினர். நீதிபதி மீதான தாக்குதலுக்கு ஜாஞ்சர்பூரி வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த சம்பவம் “முன்பு நடைபெறாது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறிய உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ராஜன் குப்தா மற்றும் மோஹித் குமார் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 29 ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பான நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டது. அன்றைய தினம் டிஜிபி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதியை தாக்கிய ஆய்வாளர் கோபால் பிரசாத் மற்றும் உதவி ஆய்வாளர் அபிமன்யு குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.