திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4 கோடி ரூபாய் இழப்பு..
கனமழை காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருமலையில் கடந்த 17, 18,19 ஆகிய தேதிகளில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகன மழை பெய்தது.
இதன் காரணமாக திருப்பதி மலைப்பாதைகள் கடும் சேதம் அடைந்தன. மேலும் திருப்பதி மலைக்கு நடந்து செல்வதற்காக பயன்படுத்தப்படும் வழித்தடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.மேலும் திருப்பதி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஸ்வரர் சுவாமி கோவில் முகமண்டபம் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.
இதனை சரிசெய்ய சுமார் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் திருப்பதியில் தேவஸ்தான ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகளும் கடும் சேதம் அடைந்துள்ளன. இதுபோன்ற வகைகளில் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு தேவஸ்தானத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் ஏழுமலையானை வழிபடுவதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் புயல் மழை காரணமாக திருப்பதி மலைக்கு வர இயலாத நிலையில் இருந்தால் மழை பாதிப்பு குறைந்த பின் திருப்பதி மலைக்கு வந்து அதே டிக்கெட்டில் ஏழுமலையானை வழிபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.