ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளம்… 20-க்கும் மேற்பட்டோர் பலி, பலர் மாயம்
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனந்பூரின் கதிரி பஜார் நகரில் பழமையான கட்டடம் சரிந்து பக்கத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்
திருப்பதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பதிக்கு வந்துள்ள பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச உணவு அளித்து வருகிறது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபலீஸ்வரர் கோவில் முகமண்டபமும் மழையால் சேதமடைந்துள்ளது. தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிவன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம் . இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக திருப்பதி மலையில் இருந்து அங்கு வந்து சேரும் நீர்வீழ்ச்சியில் பொங்கிப் பாய்ந்த மழைவெள்ளம் கபலீஸ்வரர் கோவில் முக மண்டபத்தை இடித்து தள்ளியது.
நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணா நதி கரைபுரண்டு ஓடும் நிலையில் தண்ணீர் பெருக்கெடுத்து கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விட்டது. இதனால், அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வு செய்தார்.
சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக ஆந்திர மாநில அரசு கூறியுள்ளது. காணாமல் போன மேலும் 18 பேரையும் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 7 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.