மாவீரர்களை நினைவேந்த தடைபோடவே முடியாது! – கூட்டமைப்பு எம்.பி. வினோ.
“எமது போராட்ட வரலாற்றில் எமது மக்களுக்காக – எமது மண்ணுக்காக – எமது அரசியல் உரிமைக்காக – சுதந்திரத்துக்காகப் போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு. அதற்கு உங்களால் தடைபோட முடியாது. தடைபோடவும் கூடாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒன்றுகூடல்களுக்குப புதிதாக ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த இருந்ததாலும் ஒரே கல்லில் இரு மாங்காய்களாக மாவீரர் வாரம் தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாலும் இவற்றை புதிய சட்டம் மூலம் வர்த்தமானி ஊடாக தடுக்க அரசு முயற்சித்துள்ளது.
மாவீரர் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கிலே மாவீரர்களின் உறவுகளால் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரத் தயாராகவுள்ள நிலையிலே வடக்கு, கிழக்கிலே உள்ள நீதிமன்றங்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்டவர்களுக்கும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக்கூடாது; ஒன்றுகூடக்கூடாது என்ற தடை உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கின்றன.
எங்களின் விடுதலைக்கு தங்களின் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் மாவீரர் வாரத்தில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர். எனவே தான் இலங்கையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க அரசு திட்டமிட்டு இவ்வாறான கொரோனா சுற்றறிக்கைகளைக் காட்டி தடை செய்கின்ற கேவலமான ஒரு ஆட்சியத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம்.
ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான் மக்கள் பங்கேற்ற நிலையில் அங்கு எந்தவித கொரோனாத் தொற்றுக்களும் ஏற்படவில்லை. ஆனால், வடக்கு, கிழக்கில் எமது தியாகிகளுக்கு – மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் புறப்படுகின்ற வேளையிலே இவ்வாறான தடைகள் போடப்படுகின்றன. மன்னார் மாவட்டத்திலுள்ள ஆட்காட்டி வெளியில் மாவீரர் துயிலும் இல்லத்திலுள்ள பிரதான பொதுச் சுடர் ஏற்றும் பீடம் சில காடையர்களால் காட்டுமிராண்டித்தனமாக உடைத்தெறியப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னங்களை அழிப்பதன் உடைப்பதன் ஊடாக தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்துவிடலாம் என்று அரசோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அல்லது அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற காட்டிக்கொடுப்போரோ நினைத்தால் அது ஒருபோதும் நடைபெறப்போவதில்லை” – என்றார்.