10ஆவது மெகா தடுப்பூசி முகாம் : இறந்தவர் 2ஆவது தவணை செலுத்திக் கொண்டதாக பரவிய குறுஞ்செய்தி

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 10ஆவது மெகா தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 18 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. காஞ்சிபுரத்தில் இறந்த நபர் ஒருவர், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக வெளியான குறுஞ்செய்தி குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் தடுப்பூசி முகாமை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். மேலும், திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் நடைபெற்ற முகாம்களைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் இதுவரை தடுப்பூசி போடாத 72 லட்சம் பேர் பட்டியலை தயார்செய்து, அவர்களை அழைத்துவந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 200 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஆனால், கடந்த 2 வாரங்களாக தடுப்பூசி முகாம்களில் மக்கள் அதிகஅளவில் கலந்துகொள்ளவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோதிலும், மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்த, அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெற கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது அவசியம் என்பது போன்ற விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 671 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் வகையில், பிரத்யேக நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி அருகே கொரோனா தடுப்பூசி போடும் மக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தடுப்பூசி செலுத்த சிலர் தயக்கம் காட்டி வரும் நிலையில், தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பாளரான ரகு, கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், கடந்த மாதம் 8ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்து 40 நாட்கள் ஆன நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அவர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக குறுஞ்செய்தி வந்தது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பத்தாவது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருகின்ற வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார். எனவே, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் உழைப்பிற்கு மரியாதையும், அங்கீகாரமும் கொடுக்கும் நோக்கில், மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.