வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா: மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை வரும் 24-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுமாா் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதிலும், அவற்றில் எந்தவித தீா்வும் எட்டப்படவில்லை.
சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வந்தபோதிலும், சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென விவசாயிகள் தொடா்ந்து கோரி வந்தனா். இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள், வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை வரும் 24-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடா்ந்து அந்த மசோதாக்கள் குளிா்கால கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படவுள்ளன.
அந்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்த பிறகு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் புதிய வேளாண் சட்டங்கள் அதிகாரபூா்வமாக ரத்தாகும்.