இளைஞர், யுவதிகளை தொழில் நிமித்தம் ஜப்பானுக்கு அனுப்ப நடவடிக்கை….
ஜனாதிபதியின் சிந்தனையில் உருவான சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புத்தளத்தில் அதற்கான பதிவுகளும், ஆரம்ப நிகழ்வும் (21) இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்னவின் வேண்டுகோளுக்கிணங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர் தரக் கல்வியை முழுமையாக பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும். என்னும், அவர்கள் பரீட்சையில் சித்திபெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
முதற்கட்டமாக புத்தளம் மாவட்டத்தில் இருந்து 135 இளைஞர், யுவதிகள் தொழில் நிமித்தம் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
பதிவுக் கட்டணம் மற்றும் மொழி உள்ளிட்ட பயிற்சிக்குரிய கட்டணங்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகளிடமிருந்து அரசாங்கத்தினால் அறவிடப்படவுள்ளது.
அத்துடன், தொழில் வாய்ப்புகளுக்காக பதிவு செய்வோர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நிபுணத்துவம் பெற்றவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர், நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் பரீட்சையில் சித்தி பெறுவோர் மாத்திரமே ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
குறித்த ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எம்.பி. ரன்தெனிய, ஜப்பான் நாட்டின் இலங்கை முகாமையாளர் கவஹார மற்றும் பிரதிநிதி சியோலி ஆகியோருடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தொழில் நிமித்தம் ஜப்பான் நாட்டுக்கு செல்வோர் இலங்கை நாட்டிற்கு நன்மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன இங்கு குறிப்பிட்டார்.