தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு- சான்றிதழ் பெறுவதில் இருந்த குளறுபடிகளுக்கு தீர்வு
10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு முதல் மாற்றம் கொண்டு வரப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் படித்த பயிற்று மொழியை பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கான சான்றிதழ்களை பெறுவதில் பெரிதும் குழப்பம் நிலவி வருகிறது. இதனை எளிதாக்கும் பொருட்டு 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையில் மாணவர்கள் படித்த பயிற்று மொழியையும் மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், நவம்பர் 22 முதல் டிசம்பர் 4 ந் தேதி வரையிலான நாட்களில் மாணவர் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் பயின்றார் என்ற விவரங்களை தனித்தனியே கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.