சாதாரணத் தரப் பரீட்சையின் சாதனையாளர்கள் பிரதமருடன் சந்திப்பு-!
இரண்டாயிரத்து இருபது கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று நாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஐந்து மாணவ மாணவிகள் மற்றும் வரலாற்றில் முதல் தடவையாக 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்ற விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் ஆகியோர் இன்று (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தனர்.
பிரதமரை சந்திப்பதற்கு வருகைத்தந்த க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் பிரதமர் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், அவர்களது எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சாதாரணத் தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி எய்திய கண்டி மஹாமாயா கல்லூரியின் சயுரன்கி தருஷிகா தெவ்மினி பிரேமசிறி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியின் ஆர்.பஹன்மா உபனி லெனோரா, ஹொரன ஸ்ரீபாலி மகா வித்தியாலயத்தின் ஆர்.ஒளஷதி சந்தீபா, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் ஸ்ரீமாதுரை சிந்தனைசெல்வன் மற்றும் கந்தானை டி மெசினத் கல்லூரியின் டீ.நிபுன் தினுக அதிகாரி ஆகிய மாணவ மாணவிகளே பிரதமரை சந்தித்தனர்.
வரலாற்றில் முதல் முறையாக விழிப்புலனற்ற மற்றும் விசேட தேவையுடைய மூன்று மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ள நிலையில், அவர்களில் இருவரை பிரதமருக்கு அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவ்வாறு 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்ற இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலையின் பிரயன் கிங்ஸ்டன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியின் பாலகிருஷ்ணன் பிரசோபன் ஆகிய மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர், அவர்களது திறமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தின்போது கலந்து கொள்ளாத ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி எய்திய பிறப்பிலேயே உடல் உபாதைகளை கொண்ட மாத்தறை, பம்பரெந்த சத்தர்மராஜ மஹா வித்தியாலயத்தின் தெவ்மி ரன்சாரா ராஜபக்க்ஷ மாணவியும் இதன்போது நினைவுகூரப்பட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.