கனமழை பாதிப்பு : மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண நிதி வழங்க உத்தரவு

கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5.000 வழங்கப்படும் எனப் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பலவராக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழக மாவட்டங்களிலும் புதுவையிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
இதனிடையே புதுச்சேரியில் மழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுவே சென்றனர். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முன் புதுச்சேரி தலைமைச் செயலகம் வந்த அக்குழுவினர், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் புதுவையில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மத்திய குழுவினர், இன்று காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் மத்திய குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 7 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டது. மேலும், பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழை சேதம் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளேன். இடைக்கால நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.300 கோடி கேட்டுள்ளோம்.
அதேசமயம் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5.000 வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.