தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்கலாம் – உயர் நீதிமன்றம்
கல்வி நிறுவனங்களை சார்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களை தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என அறம் அறக்கட்டளையின் தலைவரான ஏ. உமர் பாருக் வழக்கு தொடர்ந்திருந்தார். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்யவில்லை என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்களின் நலன் கருதியே தடுப்பூசி போட ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிற்காலத்தில் இதற்கு மாற்று கூட வரலாம் எனவும் கூறினர்.
தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்றும் தெரிவித்தனர். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.