புதுச்சேரியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் விவசாயிகள் வாக்குவாதம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்திய உள்துறை இணைசெயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, இரு பிரிவாக பிரிந்து நேற்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டது. இந்த நிலையில் இன்று ராஜிவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு புதுச்சேரிக்கு சென்றது.
முதலில் பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வீடுகள் சேதத்தை அவர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து, இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் மணவெளி என்.ஆர்.நகர்ப்பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பகுதிக்குள் வருமாறு மத்தியக்குழுவினரை அழைத்து சென்றனர். அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து சபாநாயகர் செல்வம் மத்தியக் குழுவினருக்கு விளக்கினார். பாகூர் கிராமத்தில் மழையால் பாழான வயல்வெளிகள், முள்ளுடையில் சேதமடைந்த மின்சாதன பொருட்களையும் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதனிடையே புதுச்சேரி பரிக்கல்பட்டு கிராமத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழை, வெள்ள பாதிப்புகளை காண அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக்கூறி மத்தியக்குழுவினர் முன்பு வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அத்துடன் வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபட்டதால் அந்த இடம் பரபரப்பானது .