நினைவேந்தலைத் தடுப்பதன் மூலம் மாவீரர்களை மறக்க முடியாது!
“மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் நீங்கள் படையினரைக் குவித்து நினைவேந்தலைத் தடுப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு தமது வீரப்புதல்வர்களை மறக்கும் சூழல் உருவாகிவிடுமா? அந்த நிலைமை ஒருபோதும் ஏற்படாது. மாவீரர்களைத் தமிழர்கள் ஒருபோதும் மறக்கவேமாட்டார்கள்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், போர்க் காலத்தில் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். துயிலும் இல்லங்களை இடித்து, சப்பாத்துக் கால்களுடன் இராணுவம் நடமாடுகின்றது. துயிலும் இல்லங்களை இடிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமது வீரப்புதல்வர்களை மறக்கக்கூடிய சூழல் உருவாகிவிடுமா?
2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஒரு பேரணி கூட செல்லவில்லை.
எனவே, இலங்கை அமைதி பூங்காவாக மாறவேண்டுமானால் நினைவேந்தல் நடத்தும் உரிமைக்கு அனுமதி வழங்கும் அறிவிப்பை பகிரங்கமாக விடுக்கவும். அதைவிடுத்து அடக்கி ஆள முற்பட்டால் அமைதி ஏற்படாது” – என்றார்.