காத்தான்குடியில் அமைந்துள்ள புராதன நூதனசாலையானது பொதுமக்கள் பார்வைக்காக……

விசேட துஆ பிராத்தனை இடம்பெற்று குறித்த நூதனசாலையானது மக்கள் பார்வையிடுவதற்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் முதலாவது பற்றுச்சீட்டினை காத்தான்குடி நகரசபை தவிசாளர் பெற்று நூதனசாலையினை பார்வையிட்டுள்ளார்.
காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கை வரலாற்றினை கூறுகின்ற நூதனசாலையாக கடந்த 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு உத்தியோகபூர்வமாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் தொடர்ச்சியாக இயங்கி வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஆட்சி மாற்றம் மற்றும் கொரோணா சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்தது.
அத்தோடு சில நிர்வாக சிக்கல்களை சீர்செய்து தற்போது காத்தான்குடி நகரசபை முற்றுமுழுதாக பாரமெடுத்து நூதனசாலையினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் நோன்பு மற்றும் ஹஜ்ஜி போன்ற விசேட நாட்களை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும் எனவும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.