வராக் கடன்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
வங்கியில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு கடனைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; இதனால் கடனைச் செலுத்தாதவர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வசித்தாலும் அவர்களிடமிருந்து வாராக் கடன்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக ஜம்முவுக்கு வந்துள்ளார். அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகள் அமைத்திருந்த அரங்குகளைப் பார்வையிட்டார். பின்னர், புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்த அவர், பயனாளிகளுக்கு கடனுதவி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
ஜம்மு- காஷ்மீரில் அனைத்துப் பணிகளும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற அரசு அனைத்துத் துறைகளையும் ஈடுபடுத்தி வருகிறது.
வங்கியில் ஏதாவது தவறுகள் நிகழ்ந்தாலோ, வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் இருந்தாலோ அத்தகைய வாராக் கடன்களைத் திரும்பப் பெற அனைத்து முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அனைத்து வாராக் கடன்களும் மீண்டும் வங்கிகளுக்குக் கொண்டுவரப்படும். நாடு முழுவதும் இந்தப் பணிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2014-இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது, வங்கியில் கடனைச் செலுத்தாதவர்கள் விட்டுச் சென்ற அசையா சொத்துகள்தான் அதிக சுமையாக இருந்தன. இத்தகைய அசையா சொத்துகளின் அளவைக் குறைக்க “அங்கீகரித்தல், தீர்மானித்தல், மறு மூலதனமாக்குதல், சீரமைத்தல்’ என்ற நான்கு வகை முடிவுகளை எடுத்தோம். அதற்கு உடனடிப் பலன் கிடைத்தது.
வங்கியில் அசையா சொத்துகளை வைத்துவிட்டு கடனைப் பெற்றவர்கள் மீண்டும் அந்தக் கடனை செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியைச் செலுத்தவில்லை. அத்தகையவர்களின் அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு அவை சட்ட ரீதியில் ஏலமோ அல்லது விற்பனையோ செய்யப்பட்டு அந்தத் தொகை மீண்டும் வங்கியில் வரவு வைக்கப்பட்டது.
இப்பணி மேலும் தொடரும். கடனைச் செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்குகள் எங்கு இருந்தாலும், அவர்களின் அசையா சொத்துகள் எங்கு இருந்தாலும், அனைத்து அசையா சொத்துகளையும் கையகப்படுத்தும் பணி தொடர்கிறது. இது ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். வங்கியிலிருந்து பெறப்பட்ட அனைத்து வாராக் கடன்களையும் மீண்டும் பெறுவோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு வேகமாகவும், திறமையாகவும், வெளிப்படையாகவும் பணியாற்றி வரும் ஆளுநர் மனோஜ் சின்ஹாவை நான் பாராட்டுகிறேன். ஜம்மு காஷ்மீரில் தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறுவதற்கு பிரதமரின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மட்டுமின்றி அனைத்துத் துறை வளர்ச்சித் திட்டப் பணிகளும் இங்கு கொண்டுவரப்படும்; அதற்காக ஜம்மு- காஷ்மீர் பிரதேச நிர்வாகத்துடன் மத்திய அரசு நெருங்கிப் பணியாற்றும்.
2019-இல் மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. நேர்மையாக தொழில்கள் செய்வதற்கு தொழில்முனைவோர் இதுவரை பெற முடியாமல் இருந்த கடனுதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
சுயஉதவிக் குழுக்கள் மூலமும், வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மூலமும் நாட்டில் அனைத்துப் பகுதி பயனாளிகளுக்கும் கடனுதவிகள் வழங்கப்பட்டன. அதன்மூலம் இன்று ஏழை மக்களின் வாழ்வில் ஒளி பிறந்துள்ளது.
அரசாங்கத்தின் தொழில் முதலீட்டு சலுகைகளைப் பெற்று ஜம்மு- காஷ்மீரில் தொழில் தொடங்க நிறைய பேர் விரும்புகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் தொழில் தொடங்க நிறைய இளைஞர்கள் வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடன் பணியாற்றுவதற்காக நாட்டில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வெளிமாநில மக்கள் உங்கள் தொழிலில் பங்கெடுப்பது என்பது உங்களுக்கு கூடுதல் வலிமையைத் தரும் என்றார் அவர்.