மருத்துவக் குழுவை அமைக்க ஆட்சேபம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவக் குழு அமைக்க ஆட்சேபம் இல்லை என்று ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“ஆணையத்தை விரிவுப்படுத்த தயார்’ என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தநிலையில், ஆணையமும் இவ்வாறு கூறியுள்ளது.
ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை இரண்டாவது நாளாக நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.ஏ. சுந்தரம், தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் முன்வைத்த வாதம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்பான அப்பல்லோ தரப்பின் அச்சம் தேவையற்றது. இது ஒரு விசாரணை ஆணையம்தான். அதாவது மதிப்பிடும், கருத்துகளைத் தெரிவிக்கும் ஆணையம். ஆணையம் அதன் விதிகளுக்கு உள்பட்டே செயல்படுகிறது. ஆணையத்தின் செயல்பாடுகள் அப்பல்லோ மருத்துவமனையின் மதிப்பை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆணையம் தொடர்ந்து சட்ட விதிகளுக்கும், தனது அதிகாரத்திற்கும் உள்பட்டே விசாரணை நடத்தியது. ஊடகங்களுக்கு தகவல் கசியவிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படுகிறது. மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய ஆணையத்திற்கு உதவிடும் வகையில் மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது.
ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாகவோ, இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு முரண்படும் வகையிலோ இல்லை என்பதுதான் உண்மை. இந்த ஆணையத்தால் எந்தவித உத்தரவும் பிறப்பித்து செயல்படுத்த முடியாது எனும் நிலையில், பாரபட்சமாக செயல்பட வாய்ப்பில்லை.
ஆணையம் அரசுக்கு அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்படும். ஆணையத்தின் அறிக்கையானது, தவறுகள் ஏதும் நடத்திருக்கிறதா? அப்படி ஏதாவது தவறு நடந்திருந்தால் அது போன்று எதிர்காலத்தில் நிகழாமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பரிந்துரைக்கும். அவ்வளவுதான். ஆணையத்திற்கு உத்தரவிடும் அதிகாரம் ஏதும் இல்லை.
இந்த விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் மனுவின் கோரிக்கையின்படி, ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அதற்கு ஆணையம் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காது. ஆணையம் சட்டப்படி அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதால், ஒட்டுமொத்த ஆணையத்தின் செயல்பாடுகளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை
வியாழக்கிழமையும் தொடர்கிறது.