ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு இவருக்கே சொந்தம்! நீதிமன்றம் தீர்ப்பு.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதை வரவேற்று ஜெ தீபா பேசியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அப்போதைய அ.தி.மு.க., அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தனித்தனியாக 3 வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த சொத்துக்கு அதிபதியான ஜெயலலிதா ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்து, படிப்படியாக மேலே வந்து முதல்-அமைச்சர் பதவியை அடைந்தவர்.
திருமணமாகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை. அரசு முறையில் அவரது உடல் அடக்கம் செய்தபோது, இறுதி சடங்கை மனுதாரர் ஜெ.தீபக் தான் செய்தார். அப்படிப்பட்டவர் (ஜெ.தீபக்), ஜெயலலிதாவின் வாரிசு என்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது, அதை தாசில்தார் வழங்க மறுத்து நீதிமன்றத்தை அணுகும்படி 2017-ம் ஆண்டு கூறியுள்ளார்,
அதற்கு அவர் கூறிய காரணம் என்வென்றால், ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தீபக் வசம் இல்லை. அதை அவர் தாக்கல் செய்யவில்லை என்பதுதான். இதனால் தேவையில்லாமல், அவர் கோர்ட்டுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வீட்டிற்கு தீபாவும், தீபக்கும் உரிமையாளர்கள் கிடையாது. வேதா நிலையம் யாருடைய சொத்தும் இல்லை. அதற்கு வாரிசு இல்லை என்பது போலத்தான் அரசு நடவடிக்கை எடுத்து செயல்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி தங்களது தலைவரை கெளரவிக்க நடவடிக்கை எடுப்பது எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியது தான்.
ஆனால், இந்த வழக்கில், தலைவியின் வீட்டில் உரிமையையே வேறுபடுத்தி காட்டி விட்டனர். எனவே, இந்த வழக்குகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தியும், இழப்பீடு நிர்ணயித்தும், அரசுைடமையாக்கியும் தமிழக அரசு (கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை) பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்கிறேன்.
இந்த சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகை மாவட்ட கோர்ட்டில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் வேதா நிலையத்தின் சாவியை மனுதாரர்களிடம், சென்னை ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தீபா கூறுகையில்,
இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்தாலும் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
வேதா இல்லத்தை அருங்காட்சியமாக மாற்றும் எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே என கூறியுள்ளார்.