ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் மதிப்பு மற்றும் அதன் உள்ளே உள்ள வசதிகள் குறித்து தெரியவந்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மூன்று வாரங்களில் வாரிசு தாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த வீட்டின் சாவி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேதா இல்லம் 24,000 சதுர அடி கொண்டதாகும். இந்த வீடு உள்ள இடத்தை ஜெயலலிதாவின் தாயாரான வேதவள்ளி (சந்தியா) ரூ 1.30 லட்சத்திற்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீட்டின் மதிப்பு ஜெயலலிதா உயிரிழந்த 2016ஆம் ஆண்டில் ரூ 90 கோடி என நகரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மதிப்பிட்ட நிலையில் தற்போது ரூ 100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.
இந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுற கட்டடத்தின் கீழ் பகுதியில் தனி பாதுகாவலருக்கான அறையும், இரண்டாவது தளத்தில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கென்று தனி அறையும் இருக்கும்.
மூன்றாவது தளத்தில் முதலமைச்சரின் தனி செயலாளருக்கான அறையும், முக்கிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஜெயலலிதாவுக்கான தனி அறையும் அமைந்திருக்கும். ஜெயலலிதாவின் அறைக்குள் வெளி நபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை சசிகலாவைத் தவிர.
ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி சசிகலாவுக்கு வேதா இல்லத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பார்வையாளர்களுக்கென தனி அறையும் அமைக்கப்பட்டிருந்தது. இப்படி பிரமாண்டமான வேதா இல்லம் இனி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபாவிடமும், தீபக்கிடமும் செல்லவிருக்கிறது.