சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவில் 70 குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 70 குடும்பங்களைச் சேர்ந்த 189 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இன்று(26) மாலை 4.00மணிக்கு வெளியிடப்பட்ட தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 அங்கத்தவர்கள் ஆனந்தபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமாக இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 5குடும்பங்களைச் சேர்ந்த 19அங்கத்தவர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 18குடும்பங்களைச் சேர்ந்த 34அங்கத்தவர்களும், வெலிஓயா கிராம சேவகர் பிரிவில் 9குடும்பங்களைச் சேர்ந்த 18நபர்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 37குடும்பத்தைச் சேர்ந்த 116 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மன்னாகண்டல் பகுதியில் யானைத் தாக்குதலால் மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டு மதிப்பீடுகள் அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.