பெண் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அபிவிருத்தியில் ஆர்வம் காட்ட வேண்டும்!
“உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததை அடுத்து இலங்கையின் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்தத் தெரிவு முறையில் குறைபாடுகள் உள்ள போதும் பெண்கள் தமது தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்த இந்த ஏற்பாடு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பௌதீக அபிவிருத்தி விடயங்களைக் காட்டிலும் உள்ளூர் மட்டத்தில் சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பெண் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுதல் அவசியமாகும்.”
இவ்வாறு முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆண் உறுப்பினர்கள் பௌதீக அபிவிருத்தியிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் ஒப்பந்தக்கார்ர்களாகவே அவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அல்லது ஒப்பந்தக்காரர்கள் பலர் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக உள்ளனர். பெண் உறுப்பினர்களும் பாதை அபிவிருத்தி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும்போது ஆண் உறுப்பினர்களுடன் முட்டி மோதி முரண்படும் போட்டி சூழல் ஒன்று நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.
அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் சமூகம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் குறித்தான விடயங்களில் அதிக அக்கறை காட்டுதல் வேண்டும்” – என்றார்.