சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் பக்தர்கள் ஐயப்பனை வழிபடலாம். நாள்தோறும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்த 30,000 பக்தர்கள் மற்றும் நேரடியாக பதிவு செய்த 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், பம்பையில் தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேவசம் கூட்டம் நடைபெற்றது. இதில், தினசரி பக்தர்களின் இந்த எண்ணிக்கையை, ஆன்லைன் பதிவு மூலம் 40 ஆயிரமாகவும், நேரடி பதிவு மூலம் 5000 ஆகவும் அதிகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் சிறு குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டும் சடங்கு நடத்தவும் சன்னிதானத்தில் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் தடைபட்டிருந்த நெய்யபிஷேகத்தை மீண்டும் தொடங்கவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாரம்பரியமாக சபரிமலை சன்னிதானம் செல்லக் கூடிய பம்பா – நீலிமலை – அப்பாச்சி மேடு – சரம் குத்தி பாதை வழியாக பக்தர்களை அனுமதிக்க முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பம்பா, நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் இப்பணி நிறுத்தப்பட்டிருந்தது.

கோயிலுக்கு சென்று தரிசனம் முடிந்த உடன் பக்தர்கள் திரும்பி செல்ல வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இதன் காரணமாக, மலையேறிய உடனே மலை இறங்க வேண்டியிருப்பதால், பக்தர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

தற்போது, பக்தர்களை சன்னிதானத்தில் தங்க வைக்கவும், தேவசம் போர்டு விடுதியில் 300 அறைகளில், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாகவும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சபரிமலை கோயிலுக்கு வருபவர்கள், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் மேற்கொண்ட RTPCR சோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

5 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு கொரோனா சான்றிதழோ, ஆவணங்களோ தேவையில்லை. 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு RTPCR நெகட்டிவ் சான்றிதழ் தேவை. பக்தர்கள் அசல் ஆதார் அடையாள அட்டை கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.