சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழை..
சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பல முக்கிய சாலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு கோயம்பேடு, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் என மாநகரம் முழுவதும், புறநகர்ப் பகுதிகளிலும் அவ்வப்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் மாறியது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
பள்ளிக்கரணை அடுத்த நாராயணபுரத்தில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரால் கொளத்தூர், வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கக் கூடிய மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, அத்திபட்டு, அயனம்பாக்கம் சாலை பகுதிகளில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் ஆறாக வழிந்தோடுவதாகவும் இதனால் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வேறுவழியின்றி வீடுகளை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.