பூமிக்கடியில் இருந்து 25 அடி உயரத்துக்கு மேலெழுந்த உறைகிணறு – பீதியடைந்த மக்கள்
தொடர் கனமழை காரணமாக திருப்பதியில் தனியார் நிலத்தில் பூமிக்கடியில் இருந்த, 25 அடி ஆழமுள்ள உறைகிணறு திடீரென மேலெழும்பியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி அருகே உறை கிணற்றில் இருந்து 25 அடி உயரத்திற்கு தண்ணீர் திடீரென மேலெழுந்துள்ளது. கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த இச்சம்பவத்தை கண்ட, அதன் உரிமையாளர் அச்சத்துடன் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். உறைக்கிணற்றில் இருந்து தண்ணீர் மேலெழும்பியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சிற்றோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்ததாகவும், அதன் மீது தான் தற்போது வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போதும் உயிரோட்டத்துடன் உள்ள அந்த சிற்றோடையில் தொடர்மழையால், நீரோட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட உந்து சக்தி காரணமாக, உறைகிணறு மேலெழும்பியதாக விளக்கமளித்துள்ளார்.