இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட கூட்டெரு லக்பொஹர நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்வு.

சேதன விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரிவினால் உற்பத்தி செய்யப்பட்ட 91 ஆயிரம் கிலோகிராம் கொண்ட கூட்டெரு லங்கா லக்பொஹர நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22 ஆவது படைப் பிரிவில் இராணுவ தளபதியும் கொவிட் செயலணியின் பிரதானியும் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இராணுவத் தளபதியினால் லங்கா லக்பொஹர நிறுவனத்திடம் உரிய தொகை சேதனப் பசளை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சேதன விவசாய வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக இராணுவம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வேலைத் திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரானுவத்ர்தினால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் முதல் கட்டமாக 93 ஆயிரம் கிலோ கிராம் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டு உரிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இதன்போது இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரிவினரால் 25,000 மெற்றிக் தொன் சேதன பசளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
விவசாய செயற்பாடுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மண்ணை பதப்படுத்தும்போது மண்ணின வளத்தை மேலும் கூட்டுவதற்காக இப்பசளை ஏதுவாக அமையும் என்றும் ஒரு கிலோ கிராம் சேதனப்பசளையின் விலை 15 ரூபா தொடக்கம் 25 ரூபாய் விலை வீச்சிடையே விற்பனை செய்வதற்கு உள்ளதாகவும் லக்பொஹர நிலையங்கள் ஊடாக இச்சேதனப் பசளையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக இதன்போது லங்கா லக்பொஹர நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதேச முகாமையாளர் தம்மிக ரட்நாயக்க தெரிவித்தார்.