டிங்கர் லசந்த என்கவுண்டரில் கொல்லப்படுவார் என்பதை சட்டத்தரணிகள் சங்கமும், தென் மாகாண ஆளுநரும் ஐஜிபிக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தனர்!
கடந்த 25ஆம் திகதி இரவு, டிங்கரின் லசந்த சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸிடம் தனது கட்சிக்காரரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே வெளிநாட்டில் இருந்த ஊடகவியலாளர் உவிது குருகுலசூரிய தனது முகநூலில் டிங்கர் லசந்தவை வெளியே அழைத்துச் சென்று ஆயுதங்களைக் காட்டுமாறு அழைத்துச் சென்று பொலிசார் கொலைசெய்ய திட்டம் தீட்டி இருப்பதாக எழுதியிருந்தார்.
சட்டத்தரணி சஞ்சய ஆரியதாஸவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தவுடன் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பொலிஸ் மா அதிபருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடாக இதனை அறிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மற்றும் தென் மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இதனை அறிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மற்றும் தென் மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருந்த போதிலும், சந்தேகநபரான டிங்கரின் லசந்த நேற்றிரவு ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் பொலிசார் மீது கைக்குண்டை வீசத் தயாரான போது , போலீஸ் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் , சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என ஊடகங்கள் நேற்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.