பொய் வழக்கில் சிக்கவைக்க சதி; அமித்ஷாவிடம் புகார் தெரிவிப்பேன் – மகாராஷ்டிரா அமைச்சர்
சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதைப்பொருள் பறிமுதல் மற்றும் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்து பேசிவருவதால் தன்னை பொய் வழக்கில் சிக்கவைக்க சதி நடப்பதாகவும், தன்னையும், தனது குடும்பத்தினரையும் சிலர் உளவு பார்ப்பதாகவும் மகாராஷ்டிர மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நவாப் மாலிக் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை அருகே உல்லாசக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த விவகாரத்தில் கைதாகிய ஆர்யன் கான் பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்த வழக்கில் ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனராக இருந்த சமீர் வான்கடே குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அதிரவைத்து வருபவர் மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நவாப் மாலிக், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்ந்து வந்து உளவு பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக நவாப் மாலிக் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னை தொடர்ந்து வந்து புகைப்படங்கள் எடுத்ததாக இருவரின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் போல தன்னையும் பொய் வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக அச்சம் தெரிவித்த நவாப் மாலிக், இதனால் தான் பயந்துவிடவில்லை என்றும், ஆனால் இதுபோல நடப்பதால் எதிரிகளின் நோக்கம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் இரண்டொரு நாட்களில் முறைப்படி மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவாக புகார் கடிதம் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி தனக்கு கோடிக்கணக்கான பணத்தை மாதா மாதம் வசூல் செய்து தர வேண்டும் என நிர்பந்தித்ததாக எழும்பிய புகார் அமைச்சர் பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.