வாடகைக்கு வீடு விட்டது குற்றமா.. ஹவுஸ் ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய தம்பதி
காரைக்குடியில் 45 சவரன் நகை வைரம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட 8 கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனுரில்வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் தட்சணாமூர்த்தி இவரும் இவரதுமனைவி விசாலாட்சியும் கடந்த ஜூலை 3ம் தேதி இரவு வீட்டில் இருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்து முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் அவர்களை தாக்கி கட்டிப்போட்டு சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க மற்றும் வைர நகைகளையும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்றனர்.
மெதுவாக தனது கைகளை விடுவித்துக் கொண்ட தட்சிணாமூர்த்தி அதன் பின்பு தனது மனைவியின் கைகளையும் அவிழ்த்துவிட்டு சாக்கோட்டை காவல்துறைக்கு தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து கொள்ளை நடந்த தட்சிணாமூர்த்தி வீட்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேரில் விசாரணை செய்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க காரைக்குடி டிஎஸ்பி வினோஜீ தலைமையில்3 தனிப்படைகள் அமைக்கபட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தநிலையில் காவல்துறை விசாரணையில் தட்சிணாமூர்த்தி வீட்டில் குடியிருந்த ராமு அவரது மனைவி பாக்கியலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பாக்கியலட்சுமி கணவர் ராமு பாக்கியலட்சுமியின் தோழி மஞ்சுளா மஞ்சுளாவின் மகன் அசோக்குமார் இவரது கூட்டாளிகள் மகேஷ் அம்சகுமார் பிரபுராஜ், ஐங்கரன் உள்ளிட்ட எட்டு பேர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ரொக்கம் , தங்க, வைர, வெள்ளி நகைகளையும் மீட்டுள்ளனர்.