ஒமிக்ரான் கொரோனா வேரியண்ட்: தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரம்.. விமானபயணிகளுக்கு கட்டுப்பாடு
தென் ஆப்பிரிக்காவில் புதிய கொரோனா உருமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா பரவல், மற்றும் அந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசியை இந்தியா ஏற்றுக் கொள்கிறதா என்பதை பொறுத்து கட்டுப்பாடுகள் மாறுபடுகின்றன.
இந்நிலையில், புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் , சீனா, நியூசிலாந்து , இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சென்னை விமான நிலையம் வந்தவுடன் சோதனை மேற்கொள்ளப்படும். இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கொரோனா நெகடிவ் சான்றிதழோடு வந்தாலும் அவர்களுக்கு மீண்டும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை எடுக்கப்படும். ஏழு நாட்கள் வரை அவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, வங்கதேசம், போட்சுவானா, மொரிசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ் இருந்தால் தமிழ்நாடு வந்தவுடன் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு வார காலம் சுயமாக உடல்நிலையை கண்காணித்து அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த ஏழு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஒரு தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியிருந்தால் சென்னை வரும் போது விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். இந்த பன்னிரண்டு நாடுகள் அல்லாமல் பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு விமான நிலையம் வரும் போது ஆர் டி பி சி ஆர் சோதனை செய்யப்படாது. ஆர் டி பி சி ஆர் சோதனை பயணிகளின் செலவிலேயே செய்யப்படும். சாதாரண ஆர் டி பி சி ஆர் 700 ரூபாய்க்கும் துரித கொரோனா பரிசோதனை 3 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் செய்யப்படுகிறது.