ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: தமிழ்த் தேசியக் கட்சி கடும் கண்டனம்!
“முள்ளிவாய்க்காலில் மாவீரர் நாளன்று செய்தியாளர் ஒருவர் இராணுவத்தினர் சிலரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மனித உரிமைகளை குறிப்பாக ஊடகவியலாளர்களின் உரிமைகளை மதிக்கும் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீடு அற்றவர்கள் சிலருக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகளை வட பிராந்திய கட்டளைத் தளபதி கையளித்த அதே சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வட பிராந்திய இராணுவத் தளபதியின் கவனத்தை நாம் கோருகின்றோம்.
மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வட பிராந்திய கட்டளைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று நாம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்றார்.