பாகிஸ்தானை பதறவைத்த வங்கதேசம்,
வங்கதேசம் – பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சிட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 330 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி – அப்துல்ல சஃபீக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் அப்துல்லா சஃபீக் அரைசதம் அடித்த கையோடு வெளியேற, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அபித் அலி சதமடித்து அசத்தினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய அசார் அலி, பாபர் ஆசாம், ரிஸ்வான் என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபித் அலியும் 133 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 25 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹீம் – யாசில் அலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.