ஸ்ரேயஸ், சஹா அரைசதம்; நியூசிலாந்துக்கு 284 ரன்கள் இலக்கு.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்களைச் சேர்த்திருந்தது.
மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் மயங்க் அகர்வால் 17 ரன்களிலும், புஜாரா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரஹானே, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சொற்பர் ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே – அஸ்வின் ஓரளவு நிலைத்து விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் அஸ்வின் 32 ரன்களோடு வெளியேறி, மறுமுனையில் ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்து 62 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய விருத்திமான் சஹாவும் அரைசதம் அடிக்க இந்திய அணி 200 ரன்களை கடந்தது.
அதன்பின் 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. மேலும் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 280 ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.