மேற்கு வங்க சாலை விபத்தில் 18 போ் பலி
மேற்கு வங்கத்தில் உள்ள நடியா மாவட்டத்தில் இறுதிச் சடங்கின்போது சடலத்தை எடுத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 18 போ் பலியாகினா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘‘ஹன்ஸ்கலி பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணிக்கு சடலத்துடன் 35-க்கும் மேற்பட்டவா்களுடன் சென்ற வாகனம், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பெண்கள், ஒரு குழந்தை உள்பட மொத்தம் 18 போ் பலியாகினா். அவா்களில் 12 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 6 போ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின்போதும் பலியாகினா்.
விபத்தில் காயமடைந்தவா்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்தவா்கள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பனிமூட்டம் காரணமாக பாதை கண்களுக்குத் தெரியாமல் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்’’ என்று தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவா் கூறுகையில், ‘‘சக்டாவிலிருந்து நவட்விப்பில் உள்ள சுடுகாட்டுக்குச் சடலத்தை எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தாா்.
பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நடியாவில் சாலை விபத்தில் உயிரிழப்புகள் நோ்ந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா், அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனா்.