போதைப்பொருள் வழக்கு: அமேசான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்… வர்த்தகர்கள் கேள்வி!
போதைப் பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் ஆரியன் கான் மீது கைது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அமேசான் மீது ஏன் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வர்த்தகர்கள், அமேசான் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் இந்தியா ஆன்லைன் விற்பனை நிறுவன நிர்வாக இயக்குநர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் காவல்துறையினர் கடந்த நவம்பர் 14ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச போலீஸார் விசாகப்பட்டினத்தில் 48 கிலோ கஞ்சாவை மீட்டு, அமேசான் மூலம் நாடு முழுவதும் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
அமேசான் நிறுவனம் போதைப் பொருள் விற்பனையில் மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட ரசாயன விற்பனையில் ஈடுபடுவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கு 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் மூலம் வேதிரசாயணப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
அமேசான் நிறுவனத்தை கண்டித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடந்த 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் வழக்கோடு அமேசான் வழக்கை ஒப்பிட்டு, மத்தியப் பிரதேச விஷயத்திலும் அதிகாரிகள் இதேபோன்ற வேகத்தை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வர்த்தகர்கள் அமைப்பு, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளது .
NDPS சட்டத்தின் பிரிவு 38 இன் கீழ்பிந்த் காவல்நிலையத்தில் அமேசான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. சிஏஐடி தேசிய தலைவர் பி.சி. பாரதியா காவல்துறையால் காட்டப்படும் “பாகுபாடு” பற்றி சுட்டிக்காட்டினார். வாட்ஸ்அப் அரட்டையின் அடிப்படையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்வதில் NCB “நேரத்தை வீணடிக்கவில்லை” ஆனால், அமேசானுக்கு எதிரான வழக்கில், நிறுவன அதிகாரிகளை பெயரிட்ட போதிலும் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
CAITயின் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மேலும் கூறுகையில், NDPS சட்டமானது, தடைசெய்யப்பட்ட பொருளை ஒரு மாநிலத்திற்கு உற்பத்தி செய்தாலோ, வைத்திருந்தாலோ, விற்றாலோ, கொள்முதல் செய்தாலோ, கிடங்குளில் வைத்திருந்தாலோ, போக்குவரத்து செய்தாலோ, இறக்குமதி செய்தாலோ அல்லது ஏற்றுமதி செய்தாலோ, அத்தகைய நபரை வாரண்ட் இன்றி கைது செய்ய விசாரணை நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநில காவல்துறையின் தரப்பில் நடவடிக்கை எடுக்காதது குடிமக்களிடையே பாரபட்சமாக நடத்தப்படுவதை தெளிவாக காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
”அமேசான் அதிகாரிகளை கைது செய்வதற்கு பதிலாக, MP போலீஸ் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க விரும்பி அமேசான் பதிலுக்காக காத்திருந்தது. NDPS சட்டத்தின் கீழ், நோட்டீஸ் தொடர்பாக எந்த விதிகளும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்வதால், சட்டத்தின் கீழ் இருவேறு நடவடிக்கைகள் இருக்க முடியாது என்றும் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸுக்கு அமேசான் அளித்த பதில், இ-போர்ட்டல்களுக்கான விதிகளை மீறுவதை மேலும் சுட்டிக்காட்டுகிறது என்று கூறியுள்ள அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, ம்த்திய பிரதேச காவல்துறைக்கு அளித்த பதிலில், அமேசான், ஸ்டீவியா உலர் இலைகள் என்ற போர்வையில் மரிஜுவானா விற்பனை செய்யும் ஆறு நிறுவனங்கள் விற்பனையாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இ.காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது விற்பனையாளர்களை பதிவு செய்யும்போது KYCயை உறுதிப்படுத்துவது கட்டாயம் ஆகும். எனவே, போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் ஈடுபடும் வெளிப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அமேசானுக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறையின் நடவடிக்கையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். இ-காமர்ஸ் போர்ட்டலில் கஞ்சா விற்பனையை மேற்கொள்ளும் போது அமேசான் நிறுவனத்தில் நிகழ்த்தப்பட்ட விதிமீறல்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆராய வேண்டும் என்றும் பார்தியா மற்றும் கண்டேல்வால் வலியுறுத்தியுள்ளனர்.