முல்லைத்தீவு ஊடகவியலாளரை தாக்கியோர் பிணையில் விடுவிப்பு (Photo – Video)
முல்லைத்தீவில் நேற்று முன்தினம் (27) ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவத்தினர் நேற்று (28) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இராணுவ பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் ஜேடிஎஸ் (இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்) ட்வீட் செய்துள்ளது.
இரியகந்துரே கெதர விபுல (36), தினுக சந்தருவன் விஜேரத்ன (20) மற்றும் திவங்க கீத் தனஞ்சய (21) ஆகிய மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த படையினர் 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது சிறிலங்கா இராணுவத்தினர் முட்கம்பி சுற்றிய மட்டையால் தாக்கியமை தெரியவந்துள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் புகைப்பட ஆதாரங்களுடன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு ஊடகவியலாளர் கழகத்தின் பொருளாளராக கடமையாற்றிய விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர் பலகையில் புகைப்படம் எடுக்கும்போது அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படையினரின் ஆடைகள் சேறும் சகதியுமாக காணப்படுவதுடன், குறித்த புகைப்படங்கள் அனைத்தும் ஏற்கனவே முல்லைத்தீவு ஊடகவியலாளர்களால் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள சில புகைப்படங்களில் ராணுவ வீரர்களின் ஆடைகளிலும் ரத்தக்கறை படிந்துள்ளது.