5ம் மகிந்த மன்னன் காலத்து பஞ்சமா இது?
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் , வேட்பாளராக மஹிந்த களம் இறங்கியபோது மங்கள சமரவீரவுடன், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மகிந்தவை 5வது மன்னன் மகிந்த (முன்னைய சிங்கள மன்னன் 5வது மகிந்தவின் அவதாரம்) எனக் கூறி பரப்புரை செய்தனர். மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான கருப்பொருளாக, ஆறாவது மஹிந்தவின் கதை அமைந்தது. (மகரஜானனி எனும் பாடல் நினைவுக்கு வரலாம்)
ஆனால் இந்த நாட்டை ஆண்ட ஐந்தாவது மகிந்த யார் என்று அவர்களில் யாருக்கும் தெரியாது.
‘யார் இந்த ஐந்தாவது மஹிந்த?’
மகிந்த , ஐந்தாம் சேனா மன்னரின் சகோதரர் ஆவார்.
அவர் ஒரு துரதிர்ஷ்டவசமான நேரத்தில் அரியணைக்கு வந்தார். அவர் இராஜ தர்மத்தை மீறி ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதன் காரணமாக நாட்டு மக்கள் அவருக்கு வரி செலுத்தாமல் இருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. குடிமக்கள் வரி செலுத்தாததால் ஆட்சியே குழப்ப சூழலில் இருந்தது. அரசனின் சேவகர்கள் , அரசனின் படைக்கு சம்பளம் கொடுப்பதையும் நிறுத்தினர். சம்பளம் தராவிட்டால் உணவு தரமாட்டோம் என்று கூறி மன்னருக்கு எதிராக படையினர் கலகம் செய்தனர். உணவு உற்பத்தியும் சரிந்து போனது.
நாட்டு மக்கள் வறுமையின் விளிம்புக்குச் சென்றனர். பஞ்ச பயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்தியது. பயந்துபோன மன்னன் ருஹுணு பகுதிக்கு ஓடிவிட்டான்.
இக்காலகட்டத்தில் இந்தியாவின் சோழ நாட்டு வர்த்தகர்கள், இலங்கைக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு வந்த ஒரு குதிரை வியாபாரி இலங்கையின் நிலைமையை சோழ மன்னருக்கு தெரிவித்தான்.
இலங்கையைக் கைப்பற்ற இதுவே சிறந்த சந்தர்ப்பம் என எண்ணிய சோழ மன்னன் உடனடியாக இலங்கைக்கு ஒரு படையை அனுப்பினான். படையினர் நேராக ருஹுணுவுக்குச் சென்றார்கள். அவரது அரச படையாலும் , மக்களாலும் இடையூறு ஏற்படும் என எண்ணி ருஹுணுவில் மறைந்து காலத்தை கழித்து வந்தவரான , மன்னன் மகிந்தவுக்கு , சோழ படை தூதோலை ஒன்றை அனுப்பியது.
அதில் , மகிந்த அரசரது அரசாட்சியைக் காக்க உதவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட , சோழ மன்னர் தயாராக இருக்கிறார் எனும் தூது தகவல் இருந்தது.
மகிந்த மன்னன் , சோழ படையினர் அனுப்பிய தூது செய்தியை நம்பி, தனது மறைவிடத்தை விட்டு வெளியே வந்தார். அதன் பின் சோழ படைகள் , அரசனின் பொக்கிஷத்தை கைப்பற்றி, மன்னனை கைதி போல் சோழ நாட்டுக்கு அழைத்துச் சென்றது.
அதன்பின் சோழர்கள் இலங்கையைக் கொள்ளையடித்து, நாட்டை ஆண்டனர். மகிந்த மன்னன் , பிற் காலத்தில் சோழ நாட்டு சிறையில் கைதியாக வாழ்ந்து இறந்தான்.
இது 5ம் மகிந்தவின் கதை.
2005ம் ஆண்டு , மங்கள சமரவீர, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் அரசன் மகிந்த, 5வது மகிந்த என மகுடம் சூட்டினர்.
ஆனால் மகிந்தவின் காலத்தில், மக்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை. அரச ஊழியர்களும் இராணுவத்தினரும் சம்பளத்தை இழக்கவில்லை. ஆனால் இராணுவ எழுச்சி ஒன்று மட்டும் ஏற்பட்டது.
அப்போதுதான் இலங்கையில் நடந்த போருக்கு தலைமை தாங்கிய ஜெனரல் பொன்சேகா, மகிந்தவுக்கு சவால் விடுத்து , ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ, 1962ல் நடந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னர், மிகப் பெரிய இராணுவ மறுசீரமைப்பை செய்து, சில உயர் அதிகாரிகளை கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு, சிலரைச் சிறைக்கும் அனுப்பினார்.
அக் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொன்சேகாவின் ஜனநாயக எழுச்சியை மஹிந்த வெற்றிகரமாக எதிர்கொண்ட போதிலும், அவரால் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க முடியவில்லை.
வருமானம் இல்லாத சீனக் கடனில் அவரது திட்டங்கள் தொடங்கப்பட்டதே இதற்குக் காரணம்.
ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகம். மற்றையது மத்தளை விமான நிலையம். மூன்றாவது நாடு தழுவிய சாலை திட்டம்.
2010ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்தது.
போருக்கான ஆயுதங்கள் வாங்க செலவழித்த பணம் கடன் மூலம் திரட்டப்பட்டது. அடுத்து போருக்குப் பின்னர், ஒரு பெரிய இராணுவத்தை அதிக ஊதியத்தில் பராமரிக்க வேண்டியிருந்தது. இந்த பாதுகாப்பு செலவினங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்று மஹிந்தவின் அரசாங்கம் சிந்திக்கவில்லை.
மாறாக, அரசாங்கம் சீனாவிடமிருந்து அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கி, பெரிய லாப நோக்கற்ற வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவு செய்தது. இந்த திட்டங்களில் பல ஊழல் நிறைந்தவை. கமிஷன் கொள்ளை நிறைந்தவையாகவும் இருந்தன.
அரசு ஆடம்பரமாக செலவு செய்தது. 2014ஆம் ஆண்டு சீன மற்றும் அதிக வட்டிக்கு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கான கால அவகாசம் முடிவடையவிருந்த வேளையில் மஹிந்தவின் அரசாங்கத்தின் கண்கள் திறக்கப்பட்டன.
சீனா மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடனைக் கண்டு அரசு உதடுகளை வறண்டு போகத் தொடங்கிய நேரம் , கடனின் கால அவகாசத்தின் முடிவாக இருந்தது.
இப்போது மக்கள் தங்களது வயிற்று பட்டிகளை (பெல்ட்) இறுக்கச் சொல்ல வேண்டி வரலாம் என அரசாங்கம் அறிந்திருந்தது. காரணம், உலகின் எந்தப் பணக்கார நாடும் இலங்கைக்குக் கடன் வழங்க மறுப்பதே அரசாங்கத்தின் மோசமான மனித உரிமை மீறல்களினால்தான்.
மக்களின் வயிற்று பட்டிகளை இறுக்கச் சொல்வதற்குள் , ஜனாதிபதி தேர்தலொன்றுக்கு செல்ல அரசாங்கம் தீர்மானித்தது. ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் தீர்மானம் அரச ஜோதிடர் சுமனதாசவால் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த ஆலோசனையை வழங்கியவர் அரசாங்கத்தின் பொருளாதாரத்தின் புத்திசாலியான பி.பி. ஜெயசுந்தர என்பது பின்னர் தெரியவந்தது.
அவர் தவறான அறிவுரையைக் கூறவில்லை. 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. மக்கள் வயிற்றில் பெல்ட்டை இறுக்கிக் கட்டிக்கொண்டு வாக்களிக்கச் சென்றால், மகிந்த ராஜபக்சவுக்கு , தோல்வியடைந்த பின் தொங்குவதற்கு ஒரு ஜன்னலைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
2015 மகிந்த வெற்றி பெற்றிருந்தால்……
2015 இல் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் , இன்று நடப்பது அன்றே நடந்திருக்கும். ஐந்தாம் மகிந்தவின் காலத்தில் நடந்ததுதான் இன்று ஆரம்பமாகியுள்ளது.
2015ல் சீனாவுக்கு யாத்திரை சென்ற ராஜபக்சக்களை தோற்கடிக்க , அமெரிக்காவும் இந்தியாவும் பொது வேட்பாளர்களை தெரிவு செய்த போது, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை வெற்றி பெற விட வேண்டும் என்று சொன்ன அரசியல் தீர்க்கதரிசிகள் இருந்தனர்.
‘மகிந்தவையும் , ராஜபக்சக்களையும் முடிவுக்கு கொண்டு வந்து , ஐ.தே.க. ஒரு அரசாங்கத்தை கொண்டு வர வேண்டுமாயின், 2015 தேர்தல் வெற்றியையும் மஹிந்தவுக்கே வழங்க வேண்டும். அப்படி செய்தால் மகிந்தவை தோற்கடிக்க அமெரிக்காவும் , இந்தியாவும் தேவையில்லை. மக்களே வீதிக்கு வந்து அதை செய்வார்கள்”
2015-ம் ஆண்டுக்கு பின் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடி குறித்து , அரசியல் வல்லுனர்கள் எனப்படுவோர் சொன்ன கதை இதுவாகும்.
ஆனாலும் இந்தியாவுக்கும் , அமெரிக்காவுக்கும் பொறுமை இருக்கவில்லை. ராஜபக்சக்கள் வசம் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றுவதற்கு சந்திரிகாவுக்கும் , மங்களவுக்கும் கூட பொறுமை இருக்கவில்லை.
மைத்திரி பொது வேட்பாளரானார் , மஹிந்த தோற்கடிக்கப்பட்டார்.
2015 இல் மஹிந்தவை தோற்கடித்தது சிங்கள மக்கள் அல்ல. அமெரிக்காவும், இந்தியாவும் , சிறுபான்மை கட்சிகளுமே மகிந்தவை தோற்கடித்தன.
தோல்விக்கு பின்னர் மகிந்த , மெதமுலன வீட்டு ஜன்னலில் தொங்கிக் கொண்டு ‘சிங்கள மக்களால் நான் தோற்கவில்லை ‘ என்று பெருமையடித்துக்கொண்டார், ஏனெனில் மக்கள் மஹிந்தவை தோற்கடிக்கவில்லை என்பதால்தான்.
உண்மையில் 2015 இல் மஹிந்தவும், ராஜபக்சக்களும் தப்பி பிழைத்தனர். 2019 இல் மீண்டும் அவர்களால் ஆட்சிக்கு வர முடிந்தற்கு காரணம் , அந்த தேர்தல் நெருக்கடியை தாண்டி தப்பித்துக் கொண்டதால்தான்.
ஆனால் எந்தத் தலைவருக்கும் , எந்தத் தலைவர் குடும்பத்துக்கும் , தொடக்கமும் , முடிவும் என ஒன்று இருக்கும். மகிந்தவும் , ராஜபக்சக்களும் 2019 இல் முடிவுக்கு வந்திருக்க வேண்டியவர்கள்.
ஆனால் அந்த முடிவு மிகவும் தாமதமாக இப்போது வந்துள்ளது.
இன்று இந்த அரசாங்கமும் , 5ம் மகிந்த மன்னனின் ராஜ்ஜியம் போல் உள்ளது.
அரசைக் காக்க 5ம் மகிந்த மன்னனுக்கு உதவ வந்த சோழன் போல , இன்று டொலர் தருவதாகக் கூறி இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்ற உலக வல்லரசுகள் நாடகம் ஆடுகின்றனர் .
மக்கள் மீண்டும் விஜேதாச ராஜபக்சவுக்கு கூட , வாக்களிப்பார்களோ என்று நான் நினைக்கவில்லை.
இப்படிச் ஒரு முச்சக்கர வண்டி சாரதி சொன்னார்.
‘அது ஏன், அவர் என்ன செய்ய? அவர் ஒரு அமைச்சர் கூட இல்லையே?
என்ற போது ,
“இல்லை ஐயா, எங்கள் மக்கள் ராஜபக்ச பெயரைக் கொண்ட வேறொருவருக்கு கூட எதிர்காலத்தில் வாக்களிப்பார்களா என்பதும் எனக்குத் சந்தேகம்தான்”
என்றார் முச்சக்கர வண்டி சாரதி.
அந்த டிரைவர் கேலியாக சொன்ன கதை இது.
- உபுல் ஜோசப் பெர்னாண்டோ (குருதா விக்ரகய)
- தமிழில் : ஜீவன்