உலகை அச்சுருத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்: கனடாவிலும் பரவியது..!
தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
புதியவகையான ஒமிக்ரான் வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது. தென்ஆப்பிரிக்காவைத்தொடர்ந்து இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதியவகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓமிக்ரான் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்திற்கு கனடா தடை விதித்திருந்தது. ஆனால் அதில் நைஜீரியா இடம்பெறவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நபர்களிடம் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் நோயின் பாதிப்புகளை கண்டறிந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. தற்போது இரண்டு நோயாளிகளும் தனிமையில் உள்ளனர், அதே நேரத்தில் பொது சுகாதார அதிகாரிகள் அவர்களின் நெருக்கமாக இருந்தவர்களின் தகவல்களை சேகரித்த் வருகின்றனர். இரண்டு பாதிப்புகளும் தலைநகர் ஒட்டாவாவில் இருப்பதை ஒன்ராறியோ அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோயாளிகளின் சோதனை மற்றும் கண்காணிப்பு ஒன்டாரியோவில் கவலைக்குரிய ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. கனடாவின் பொது சுகாதார முகமையால் இன்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு மற்றும் சோதனை தொடர்வதால், இந்த மாறுபாட்டின் பிற வழக்குகள் கனடாவில் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ‘ஒமிக்ரான்’ பாதிப்பு காரணமக அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன.
ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பல்வேறு தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.