கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சாலை விபத்தில் சிக்கி காயம்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஷேன் வார்னே தன் குடும்பத்துடன் சிட்னியில் வசித்து வருகிறார்,
இந்நிலையில் நேற்று தனது மகன் ஜாக்சனுடன் ஷேன் வார்னே, பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமுற்ற நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
52 வயதான வார்னே, இந்த சம்பவத்தில் கடுமையான காயத்தையும் தவிர்த்துவிட்டாலும், கடும் வலி ஏற்பட்டதைத்தொடர்ந்து, தனது உடலின் வேறு ஏதும் உபாதைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து ஷேன் வார்ன் கூறுகையில், “நான் கொஞ்சம் அடிபட்டு, காயமடைந்துள்ளேன். மிகவும் வேதனையாக இருக்கிறேன்” என்று தெரிவித்ததாக தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 2021 டிசம்பர் 8 ஆம் தேதி தி கபாவில் தொடங்க உள்ள முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனை செய்யும் பணிக்கு வார்னே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். வார்ன் தனது வாழ்க்கையில் ஐந்து விக்கெட்டுகளை மொத்தம் 38 தடவை எடுத்துள்ளார் மற்றும் 1996, 1999 உலகக் கோப்பையையும் வென்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு தனது சிறப்பான பங்கினை வழங்கி இருந்தார்.