அரசிலிருந்து வெளியேறும் முடிவில் சு.க. இல்லை! – தயாசிறி கூறுகின்றார்.

அரசில் இருந்து விலகுவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரசு தொடர்பில் சில விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அரசிலிருந்து விலக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரசாரங்கள் செய்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இன்னும் அரசுடன் இணைந்து செயற்படுகின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
‘அரசின் மீது உங்களுக்கு ஏமாற்றம் இல்லையா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
“இல்லை, இல்லை. அரசு தொடர்பில் எந்த ஏமாற்றமும் இல்லை. அந்தந்த சமயங்களில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறோம். இது நாங்கள் உருவாக்கிய அரசு; நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி. எனவே, அரசிலுள்ள பலவீனங்களைச் சரி செய்து முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது” – என்றார்.