தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல்
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என கொரோனா ஒமிக்ரான் வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய வகை கொரோனா திரிபு வைரஸான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த முன்னோடிக் கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ சங்கங்கள், திரையரங்குகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புடைய அனைத்து சங்கங்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர், அரசுத்துறை, தொழிற்சாலை, உணவகங்கள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பொதுமக்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம். அதனை அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்களின் நிறுவனங்கள், உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும். பணியின் போது முகக்கவசம் அணியாத அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை பணியிடை நீக்கமும், தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
அதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்கள் கட்டாய முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200 அபராதம் அல்லது காவல்துறையினர் மூலமாக வழக்குப் பதிவு செய்து உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.